வெளிநாட்டு ரோடு போட்டது யாரு?

Started by aruljothi, Jul 13, 2009, 12:51 PM

Previous topic - Next topic

aruljothi

சட்டசபையில் நெடுஞ்சாலைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், தி.மு.க., - பா.ம.க., உறுப்பினர்களிடையே பெரும் மோதல் ஏற்படக் காரணமாக இருந்தவர் தி.மு.க., எம்.எல்.ஏ., சிவானந்தம். இவர், சர்ச்சைக்குரிய பேச்சை ஆரம்பிப்பதற்கு முன், தி.மு.க., அரசின் சாதனைகளை புகழ்ந்து தள்ளினார்."தமிழக சாலைகள் எல்லாம், "பளபள'வென இருக்கின்றன. ஆரணியில் இருந்து, சென்னைக்கு இரண்டரை மணி நேரத்தில் வர முடிகிறது. சாலைகளில் செல்லும்போது, ஏதோ வெளிநாடுகளில் செல்வதைப் போன்ற பிரமிப்பு ஏற்படுகிறது' என்று அடுக்கிக் கொண்டே போனார்."முன்ன, பின்ன வெளிநாடு போயிருக்க மாட்டார் போலிருக்கு. அதுதான் இப்படி அளந்துவிடறார்' என்று சிரித்தபடி, "கமென்ட்' அடித்தனர் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள்.


சட்டசபையில் "ஐஸ்' மழை


சட்டசபையில் அமைச் சர்கள், முதல்வர், துணை முதல்வரை புகழ்வதிலும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் அமைச் சர்களைப் புகழ்வதிலும் பெரிய போட்டா போட்டி நடந்து வருகிறது. இந்து அறநிலையத் துறை அமைச்சர் பெரியகருப்பன், முதல்வரை மூலவராகவும், துணை முதல்வரை உற்சவமூர்த்தி என்றும் புகழ்ந்தார்.காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஹசன் அலி பேசும்போது, "அமைச்சர் பெரியகருப்பன் எங்கள் ஊர் கருப்பணசாமி போல தோற்றமளிக்கிறார். பெரிய மீசையுடன் அவரது தோற்றம் தான் கடுமையாக உள்ளதே தவிர, அவருக்கு மிகவும் இளகிய மனது' என்று "ஐஸ்' மழை பொழிந்தார். நெடுஞ்சாலைத் துறை மீது பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ., தண்டபாணி, "அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனை போலவே, சாலைகளும் பளபளப்பாகவும், உறுதியாகவும் உள்ளன' என்று புகழ் பாடினார்.மற்றொரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வான கோவைத் தங்கமோ, "பெரியகருப்பனை புகழ்வதற்காக அதிக நேரம் கொடுங்கள்' எனக் கேட்டு "ஐஸ்' வைப்பதில் மற்றவர்களை, "பீட்' செய்யப் பார்த்தார்."மாறி, மாறி இருவரும், "ஐஸ்' மழை பொழிவதால் சீக்கிரம் குளிரெடுக்கிறது' என்று நிருபர் ஒருவர் வெறுப்போடு, "கமென்ட்' அடித்தார்.