கோபுர கலசம் திருடும் கும்பல் கைது

Started by aruljothi, Jul 24, 2009, 01:37 PM

Previous topic - Next topic

aruljothi

சிவகங்கை:சிவகங்கை மாவட்டத்தில், கோபுர கலசங்களை திருடி, வெளிநாடுகளுக்கு விற்ற சினிமா தயாரிப்பாளர் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.காரைக்குடி கோவிலூர் ரோட்டில் நேற்று முன்தினம் இரவு, போலீசார் வாகன சோதனை நடத்தினர். ஆட்டோவில் வந்த சென்னை கண்ணகிநகர் விக்னேஷ் (22), சங்கிலி முருகனிடம் (25) விசாரித்தனர். சினிமா துறையில் வேலை செய்வதாகவும், திருப்புத்தூரில் உள்ள தயாரிப்பாளரை சந்திக்க வந்திருப்பதாகவும் கூறினர். சந்தேகமடைந்த போலீசார், இருவரிடமும் தொடர் விசாரணை நடத்தினர்.
தயாரிப்பாளர் தொடர்பு:இருவரும் பழமையான கோவில் கோபுர கலசங்களை திருடும் கும்பலை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. திருடிய கலசம் மற்றும் இருதலை மணியன் பாம்புகளை வெளிநாடுகளுக்கு விற்று இக்கும்பல் கோடி கணக்கில் சம்பாதித்துள்ளனர். கும்பல் தலைவனாக, திருப்புத்தூர் அருகே காரையூரை சேர்ந்த ராஜகோபால் (39) செயல்பட்டுள்ளார். லிவிங்ஸ்டன், ரம்பா நடித்த "என் புருஷன் குழந்தை மாதிரி' என்ற படத்தை இவர் தயாரித்துள்ளார்.
கலசத்தில் இரிடியம்':கோவில்களை பகலில்நோட்டமிடும் கும்பல்,இரவில் கலசங்களை திருடுவர். அவற்றை பல கோடி ரூபாய்க்கு வெளிநாடுகளுக்கு விற்றுள்ளனர். கலசங்களில் அதிக சக்தியுடன் மின்னல் தாக்கும்போது, இரிடியம்' என்ற வேதி பொருள் சேமிப்பாகிறது. இதன்மூலம் மின்சக்தியை உருவாக்க முடியும். இதற்கு வெளிநாட்டு கள்ள சந்தையில் அதிக வரவேற்பு உள்ளது.
சினிமா துறை:சினிமா துறையில் நஷ்டம் ஏற்பட்டதால், கலசம் திருடுவதில் ராஜகோபால் ஈடுபட்டுள்ளார். சினிமாவில் அவருக்கு உதவியாளராக இருந்த சிலரும் கும்பலில் இடம் பெற்றுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் குன்றக்குடி அருகே பலவான்குடி, அரளிப்பாறை உள்ளிட்ட இடங்களில் இக்கும்பல் கைவரிசை காட்டியுள்ளது.
4 பேர் கைது:ராஜகோபால் உதவியாளர் அந்தோணி நாச்சியப்பன் (27), விக்னேஷ், சங்கிலி முருகனை காரைக்குடி இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். மூன்று கலசங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ராஜசேகரன் எஸ்.பி., கூறுகையில், கலசங்கள் திருட்டு தொடர்பாக தனிப்படையினர் ரகசியமாக கண்காணித்தனர். திருடப்பட்ட கோவில்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. கும்பலில் எஞ்சியுள்ளோர் விரைவில் கைது செய்யப்படுவர்,'' என்றார்.