இந்தியாவின் மனிதாபிமானம் இலங்கைக்கு வரĬ

Started by aruljothi, Jul 13, 2009, 12:37 PM

Previous topic - Next topic

aruljothi

தூத்துக்குடி: தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் படகு பழுதாகி ஆறு நாட்களாக தத்தளித்த இலங்கை மீனவர்கள் ஐந்து பேரை, இந்திய கடலோர காவல்படையினர் மீட்டனர். இந்திய மீனவர்கள் விஷயத்தில் இதே மனிதாபிமானத்தோடு இலங்கையும் செயல்படவேண்டுமென தூத்துக்குடி மீனவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இலங்கை, மாத்தாளை மாவட்டம் வெளிகாமாவைச் சேர்ந்த தனபால விஜய ஹேவா(53) ஜெயரத்னே(35) மிரியந்த வணிக ரத்னே(39) ஆனந்த்(50) நந்தன குமார(32) ஆகிய ஐந்து சிங்கள மீனவர்கள் ஒரு மோட்டார் படகில் கடந்த 3ம் தேதி அங்கிருந்து மீன்பிடிக்கப் புறப்பட்டனர். படகு பழுதானதால் கடல் நீரோட்டத்தில் கடந்த 5ம் தேதி அவர்கள் தனுஷ்கோடி அருகே இந்திய கடல் பகுதிக்கு வந்துவிட்டனர். ஜூலை 10ம் தேதி வரை அவர்கள் அப்படகில் நடுக்கடலில் தத்தளித்தனர். அதுகுறித்து, வாக்கி டாக்கியில் இலங்கை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இலங்கை தூதரகம் கேட்டுக் கொண்டதற்கிணங்க, இந்திய கடலோர காவல்படை கப்பல் "சமரில்' சென்ற அதிகாரிகள் மற்றும் வீரர்கள், ஆறு நாட்களாக கடலில் தத்தளித்த இலங்கை மீனவர்களையும், படகையும் மீட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு தூத்துக்குடி அழைத்து வந்தனர்.

பின்னர் மீனவர்கள், மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். படகு பழுது சரிசெய்யப்பட்டபின் அவர்கள் இலங்கை செல்வர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.மனிதாபிமானம் வேண்டும்: தூத்துக்குடி மீனவர்கள் ஜோசப், சூசை கூறியதாவது: இந்திய கடலில் தத்தளித்த சிங்கள மீனவர்களை நமது கடலோர காவல்படை மனிதாபிமானத்தோடு மீட்டு முதலுதவி செய்து உணவு தந்துள்ளது. ஆனால், ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள், கச்சத்தீவு அருகே இந்திய கடலில் மீன்பிடித்தாலும் கூட இலங்கை கடற்படை அம்மீனவர்களை சரமாரியாக தாக்கி துன்புறுத்தி அந்நாட்டு சிறையில் அடைத்துவிடுகிறது. சில நேரம் சுட்டுக் கொன்றும் விடுகிறது. இதுபோன்ற நிகழ்வுகளைப் பார்த்த பின்னராவது இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படை மனிதாபிமானத்துடன் நடந்தவேண்டும் என்றனர்.