வங்கி 'பாதுகாப்பு' பெட்டகம் கையாள்வதில் க

Started by aruljothi, Jul 06, 2009, 04:12 PM

Previous topic - Next topic

aruljothi

வங்கி பாதுகாப்பு பெட்டகங்களில் உள்ள குளறுபடிகளால், வாடிக்கையாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். வங்கி லாக்கரில் இருந்த நகைகள், காணாமல் போனது பரபரப்பாக்கியுள்ளது. "சென்னை சிந்தாதிரிப்பேட்டை பாரத ஸ்டேட் வங்கி கிளை லாக்கரில் இருந்த 84.5 சவரன் தங்க நகை, 25 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய அஞ்சலக சேமிப்பு பத்திரம் காணவில்லை' என்று, ராஜகுமாரி (63) அளித்த புகாரே இதற்கு காரணம்.


இவர், ஐந்தாண்டுகளாக இந்த லாக்கரைப் பயன்படுத்தி வருகிறார். வங்கி வாடிக்கையாளர் சேவை மையம் மற்றும் மண்டல அலுவலகத்தில் இவர் புகார் தெரிவித்தும், திருப்தியான பதில் கிடைக்கவில்லை. "லாக்கர் சாவி உங்களிடம் உள்ளது. உங்கள் உதவியின்றி லாக்கரைத் திறக்க முடியாது. லாக்கரில் பொருட்கள் காணாமல் போனால், வங்கி நிர்வாகம் பொறுப்பல்ல' என்று வங்கி மேலாளர் பதிலளித்துள்ளார். இதுகுறித்து, போலீசில் புகார் தெரிவித்துள்ளார் ராஜகுமாரி. போலீஸ் தரப்பில், "கடந்த ஏப்ரல் 6ம் தேதி லாக்கரைத் திறந்துள்ளார். மீண்டும் 25ம் தேதி வந்தபோது, பொருட்கள் காணவில்லை. இடைப்பட்ட நேரத்தில் வந்த வாடிக்கையாளர்கள், வங்கி ஊழியர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. லாக்கரை சரியாக பூட்டிச் சென்றாரா, சாவியை வைத்துவிட்டுச் சென்றுவிட்டாரா என்றும் விசாரித்து வருகிறோம்' என்றனர்.


"லாக்கரின்' வரலாறு: டிபாசிட் தொகை, ஆண்டுக் கட்டணம் 500 முதல் 2,000 ரூபாய் வரை வாங்கி, "வாடகைக்கு பாதுகாப்பு பெட்டகம்' என்ற பெயரோடு, வங்கி லாக்கர்கள் அறிமுகமாயின. டிபாசிட் தொகையை மூலதனமாகக் கொண்டு, லாக்கர் வசதிகள் செய்து தரப்பட்டன. தற்போது டிபாசிட் இன்றி, ஆண்டுக் கட்டணம் 750 ரூபாய் செலுத்துபவர்களுக்கு லாக்கர் கிடைக்கிறது. இதற்கென வங்கி தரப்பில் பொறுப்பான மேலாளர் இருப்பார். அவரிடம் பிரதான சாவி (மெயின் கீ) இருக்கும். இந்த சாவி, அனைத்து லாக்கருக்கும் பொருந்தும். வாடிக்கையாளரின் சாவி (மாஸ்டர் கீ) ஒவ்வொருவரிடமும் மாறுபட்டிருக்கும். லாக்கரைத் திறக்க வரும் ஒவ்வொரு முறையும், பெயர், தேதி, லாக்கர் எண், வரும் நேரம், போகும் நேரம் போன்ற விபரங்களை பதிவேட்டிலும், லாக்கர் இருக்கும் அறையிலும் குறிப்பிட வேண்டும். கையெழுத்திற்குப் பின், பொறுப்பு மேலாளர், தன்னுடைய சாவியைக் கொண்டு லாக்கரைத் திறப்பார். அவர் சென்ற பிறகு, வாடிக்கையாளர் தனக்கு வேண்டியதை எடுக்க அல்லது வைத்துவிட்டு லாக்கரை பூட்டிவிடுவார்.


வருமான வரி, வாரிசு பிரச்னை, சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கையால் லாக்கரை முடக்கி வைக்கலாம். போலீஸ் நிலையம் அல்லது கோர்ட் உத்தரவால், இந்த நடவடிக்கையை வங்கி எடுக்கும். போலீஸ் அல்லது கோர்ட்டின் கைகளில், லாக்கர் போய்விடுவதும் உண்டு. தொடர்ந்து லாக்கருக்குரிய கட்டணம் செலுத்தவில்லை எனில், வங்கி முறைப்படி நோட்டீஸ் அனுப்பும். பதில் இல்லையெனில், சட்ட அதிகாரிகள் முன்னிலையில், லாக்கரை உடைக்க, வங்கிக்கு அதிகாரம் உண்டு. சட்டப்படியான விதிகளை வங்கிகள் வகுத்து, வாடிக்கையாளரின் ஒப்புதலுக்குப் பின், லாக்கரைத் தருகிறது.


இதுகுறித்து, வங்கி வாடிக்கையாளர் ஒருவர் கூறுகையில், "லாக்கர் வைத்திருக்கும் பெரும்பாலான வங்கிகளில், அடையாள அட்டை கிடையாது. ஆயிரக்கணக்கானவர்கள் லாக்கர் வைத்திருக்கும்போது, வாடிக்கையாளரின் உறவினர், நண்பர் என, வங்கி லாக்கரைப் பயன்படுத்த முடியும். போட்டோ, கையெழுத்துடன் கூடிய ஐ.டி., தரவேண்டும்; வாரிசுரிமையும் (பவர்) தரவேண்டும்' என்றார். பாதுகாப்பு கருதி வங்கிக்கு சென்றால், அங்கும் பிரச்னையா... பாதுகாப்பு பெட்டகத்திற்கே ஆபத்து வரும் போது, வாடிக்கையாளரின் சொத்துக்களுக்கு யார் பொறுப்பு என்ற கேள்விகள் எழுந்துள்ளன.


இதுகுறித்து வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாவது: வங்கிக்கணக்கு வைத்திருப்பவர்களுக்குத் தான், லாக்கர் வசதி தரப்படுகிறது. உள்ளே என்ன வைக்கின்றனர் என்பது வங்கிக்கு தெரியாது. இதில் வங்கியைக் குறை கூற முடியாது; வங்கியும் உத்தரவாதம் தராது. வாடிக்கையாளர், வங்கிக்கு உள்ள உறவுமுறையின் அடிப்படையில் செய்து தரும் வசதி இது. சென்னையில் இதுவரை வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் கொள்ளை, திருட்டு நடந்ததில்லை. வங்கியே தனது பணத்தை பெட்டகத்தில் தான் வைக்கின்றன. திருட்டு நடந்தால், அதிகளவிலான பொருட்கள் இருந்ததாக வாடிக்கையாளர் கூறிவிட முடியாது. அதற்கு வருமான வரி காட்ட வேண்டும். தற்போது பெரும்பாலான வங்கிகளில், கேமரா பொருத்தப்பட்டுள்ளது; பிரச்னை வர வாய்ப்பில்லை. கொள்ளை, திருட்டு போன்ற எதிர்பாராத சம்பவங்கள் நடந்தால், பாதிக்கப்பட்டவர்கள் கோர்ட்டிற்குத் தான் செல்ல வேண்டும். இவ்வாறு வங்கி அதிகாரி தெரிவித்தார். தற்போது பாதிக்கப்பட்ட ராஜ குமாரியும், ஐகோர்ட்டிற்கு சென்றுள்ளார். கோர்ட்டின் தீர்ப்பு மற்றும், "மாயமான' நகைகள் குறித்த விவரங்களைத் தெரிந்து கொள்ள, வங்கி வாடிக்கையாளர்கள் காத்திருக்கின்றனர்.