போலி ஆவணம் தயாரித்து ரூ.1 கோடி நில மோசடி

Started by aruljothi, Jul 02, 2009, 02:19 PM

Previous topic - Next topic

aruljothi

கோவை : காற்றாலைக்கு வழித்தடம் அமைக்க ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள விவசாய நிலத்தை போலி ஆவணம் தயாரித்து, ஆள் மாறாட்டம் மூலம் அபகரிக்க முயன்ற வழக்கில் சார்பதிவாளர், பேரூராட்சி செயல் அலுவலர் உட்பட ஏழு பேர் மீது, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகேயுள்ள வடுகபாளையம் தண்டல்கார தோட்டத்தில் வசிப்பவர் நடராஜன்(52); விவசாயி. இவருக்கு சொந்தமாக 5.47 ஏக்கர் நிலம் உள்ளது. இந்நிலத்தை ஒட்டிய இடத்தில் காற்றாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன், தனியார் காற்றாலை மேனேஜர் வசந்த், நண்பர் சுப்ரமணியம் மற்றும் நடராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். சிறிது நேரத்தில் நிலத்தை சமப்படுத்தும் புல்டோசர் வந்தது. திடீரென விவசாயி நடராஜனின் நிலத்தில் இறங்கி நிலத்தை சமப்படுத்தும் வேலையில் ஈடுபட்டது. தகவலறிந்த நடராஜனும், அவரது குடும்பத்தினர் விரைந்து வந்து புல்டோசரை வழிமறித்து, தனது நிலத்துக்குள் அத்துமீறி எப்படி நுழையலாம் எனக் கேட்டு தகராறு செய்ததால், வழித்தடம் அமைப்பது நின்றது.


இதைத் தொடர்ந்து அங்கு வந்தவர்கள், இந்த நிலத்தை நாங்கள் வாங்கி விட்டோம் எனக் கூறி பத்திரத்தைக் காட்டினர். நிலத்தை விற்காத போது, தனது பெயரில் இருந்த நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயற்சி நடந்துள்ளதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரி, எஸ்.பி., கண்ணனிடம் நடராஜன் புகார் தெரிவித்தார். புகாரை பெற்றுக் கொண்ட எஸ்.பி., இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட்டார். கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரிக்க முயன்றதாக, காற்றாலை மேனேஜர் வசந்த், சுப்ரமணியம், நடராஜ் மற்றும் மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக சார்பதிவாளர், கருமத்தம்பட்டி பேரூராட்சித் தலைவர், செயல் அலுவலர் மற்றும் பத்திர எழுத்தர் ஆகிய ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.