மின் உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம்

Started by OmMuruga, Dec 13, 2008, 09:57 AM

Previous topic - Next topic

OmMuruga

சென்னை : தமிழகத்தில் உள்ள நான்கு அனல் மின் நிலையங்களை புதுப்பிப்பதன் மூலம், உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அனல் மின் நிலையங்களில் மின் திறனை அதிகரிக்க, மத்திய மின் ஆணையம் மற்றும் ஆற்றல் திறப்பாட்டுச் செயலகம் ஆகியவை இணைந்து, இந்தியா-ஜெர்மனி எரிசக்தி திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.


இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் ஒரு பகுதியாக, "மின் உற்பத்தி நிலையங்களின் செயல்பாடு மற்றும் கண்காணிப்பு' என்ற தலைப்பிலான கருத்தரங்கு, சென்னையில் நேற்று நடந்தது. மின்துறையின் உயர் அதிகாரிகள் இக்கருத்தரங்கில் பங்கேற்றனர். கருத்தரங்கில், தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் சி.பி.சிங் பேசுகையில், ""பல்வேறு காரணங்களால் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து முழு உற்பத்தியை மேற்கொள்ள முடிவதில்லை. அரசின் விதிமுறைகளுக்கு ஏற்பவே செயல்பட வேண்டியுள்ளது. தமிழகத்தில் உள்ள அனல் மின்சக்தி உற்பத்தி நிலையங்களின் முழுமையான திறனை பயன்படுத்தி மின் உற்பத்தி மேற்கொள்ள, இந்த கருத்தரங்கு உதவியாக இருக்கும்,'' என்றார்.


தொடர்ந்து, தமிழ்நாடு மின்சார வாரிய உறுப்பினர்(உற்பத்தி) பாலசுப்பிரமணியன், மத்திய மின்சார ஆணைய இயக்குனர் சர்மா, தேசிய மின் உற்பத்தி பயிற்சித் துறை இயக்குனர் சக்சேனா ஆகியோர் கூறியதாவது: நாடு முழுவதும் உள்ள 85 அனல் மின் நிலையங்கள், 25 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டவை. இவற்றின் செயல்பாட்டுத் திறன் முழு அளவில் இல்லாததால், உற்பத்தி திறனுக்கு ஏற்ப மின் உற்பத்தி செய்ய முடியவில்லை. இந்த இழப்பில் 1 சதவீதத்தை சரி செய்தாலே, மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் ஒரு கோடியே 10 லட்சம் டன் நிலக்கரியை மீதப்படுத்த முடியும். தமிழகத்தில் எண்ணூர், தூத்துக்குடி, நெய்வேலி, மேட்டூர் உள்ளிட்ட நான்கு இடங்களில் அனல் மின் நிலையங்கள் உள்ளன. இவை நிறுவப்பட்டு 25 ஆண்டுகளைக் கடந்துள்ளன. இவற்றில் இருந்து மொத்தம் 1,050 மெகாவாட் மின்சாரம் கிடைத்து வருகிறது. இவற்றை புதுப்பித்து செயல்படுத்தினால், மின் உற்பத்தி கூடுதலாகக் கிடைக்கும். இவற்றை எவ்வாறு புதுப்பிக்கலாம், மின் உற்பத்தி திறனை எவ்வாறு அதிகரிக்கலாம் என்பது குறித்து கருத்தரங்கில் ஆலோசிக்கப்பட்டது. நாடு முழுவதும், 40 இடங்களில் இது போன்ற கருத்தரங்குகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆலோசனையின் தொடர்ச்சியாக புதுப்பிக்கும் பணி துவங்கப்படும். பணி துவங்கிய 10 மாதத்தில் முடிவடையும்.


தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் வடசென்னை, மேட்டூரில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் நான்கு உற்பத்தி நிலையங்களும், உடன்குடியில் 800 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் இரண்டு உற்பத்தி நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன. என்.டி.பி.சி., மற்றும் என்.எல்.சி.,யுடன் இணைந்து வேலூரில் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிலையமும், தூத்துக்குடியில் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிலையமும் அமைக்கப்படவுள்ளன. இந்த திட்டங்களுக்கான ஆரம்ப கட்டப் பணிகள் தற்போது துவங்கப்பட்டுள்ளன. மூன்று ஆண்டுகளில் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இந்திய நிலக்கரி, 40 சதவீதம் சாம்பல் தன்மை கொண்டதாக உள்ளன. நமது அனல் மின் நிலையங்களில் இந்திய நிலக்கரியுடன், இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு நிலக்கரியையும் கலந்து பயன்படுத்தி வருகிறோம். இந்திய நிலக்கரியையே முழுமையாக பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதற்கான வசதி நம்மிடம் இல்லை. நாடு முழுவதும் மின் பற்றாக்குறை நிலவுவதால், 15 நாட்களுக்கு தேவையான நிலக்கரியை இருப்பில் வைத்துக் கொள்வது இயலாது. நெய்வேலி மற்றும் வடசென்னை அனல் மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திலிருந்தும், மத்திய தொகுப்பிலிருந்தும் தமிழகத்திற்கு கூடுதலாக மின்சாரம் பெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் இந்த மாத இறுதிக்குள், நமக்கு 1,000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Source:Article.