News:

GinGly.com - Used by 85,000 Members - SMS Backed up 7,35,000 - Contacts Stored  28,850 !!

Main Menu

பலத்த மழை - பள்ளிகள் விடுமுறை

Started by dhilipkumar, Nov 26, 2008, 11:29 AM

Previous topic - Next topic

dhilipkumar

சென்னை நவ-26.(டிஎன்எஸ்)  தமிழகம் முழுவதும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. காவிரி டெல்டா மாவட்டங்கள், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் வெள்ளக்காடாகியுள்ளன. இதனால் இங்கெல்லாம் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப் போயுள்ளது. பயிர்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

வடக்கு இலங்கை அருகே நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, வலுவடைந்துள்ளதால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.

தலைநகர் சென்னையில் விடிய விடிய பெய்த மழையால் நகரமே வெள்ளக்காடாக மாறியுள்ளது. சாலைகள் பெரும்பாலானவற்றில் வெள்ள நீர் ஓடிக் கொண்டிருப்பதால் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

ரயில் நிலையங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் ரயில்கள் வருவது, போவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

சுரங்கப் பாதைகளில் தண்ணீர் பெருமளவில் தேங்கியிருப்பதால் அவற்றை மோட்டார் வைத்து அகற்றி வருகின்றனர்.

சென்னை விமான நிலைய ஓடு பாதையில் தண்ணீர் புகுந்துள்ளதால் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் இயல்பு நிலை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஐந்தாவது நாளாக அங்கு மழை கொட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறது. கூடவே சூறாவளிக் காற்றும் வீசியதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டுசுளது.

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக காவிரி டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த 10 ஆயிரம் மீனவர்கள் மீன் பிடிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

இதற்கிடையே சூறாவளி காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 50 விசைப் படகுகள் சேதமடைந்துள்ளன. பல நாட்டுப் படகுகளும் சேதமடைந்துள்ளன.

ராமேஸ்வரம் துறைமுகம், திருப்பாலைக்குடி, பாம்பன், தொண்டி, மண்டபம், கீழக்கரை, தேவிப்பட்டணம் ஆகிய பகுதிகளில் இந்த படகுகள் சேதமைடந்துள்ளன.

ராட்சத அலைகள் தாக்கி இவை சேதமடைந்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். பல படகுகள் பழுதுபார்க்க முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளன.

இந்த நிலையில் பாம்பன், வடக்கு சின்னப்பாலம், மஹமதியாபுரம், குண்டக்கல், தெற்குவாடி உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு கருதி வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பள்ளிகளுக்கு விடுமுறை:

மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நவ-25 அன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே காவிரி டெல்டா மாவட்டங்களிலும் நவ-25 அன்று விடுமுறை விடப்பட்டுள்ளது என்பது நினைவிருக்கலாம்.

பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு:

தொடர் மழை காரணமாக சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நவ-25 அன்று முதல் தொடங்குவதாக இருந்த செமஸ்டர் தேர்வுகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக பதிவாளர் ரத்தினசபாபதி கூறியுள்ளார்