சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பரபரப

Started by sajiv, Nov 22, 2008, 06:39 AM

Previous topic - Next topic

sajiv


சென்னை நவ-21. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நவ-21 அன்று வெடிகுண்டு மிரட்டல் காரணமாக சுமார் 4 மணி நேரம் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

சென்னை சென்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு புரளி ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சென்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக போலீசுக்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து, ரயில் நிலையம் உஷார்படுத்தப் பட்டது. உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, சோதனையில் ஈடுபட்டனர். மோப்ப நாய்கள் மூலமும் தேடுதல் பணி நடைபெற்றது. அனைத்து பயணிகளும் தீவிர சோதனைக்கு பின்னே அனுமதிக்கப்பட்டனர்.

நவ-21 அன்று அதிகாலை 6 மணியளவில் மர்ம ஆசாமி ஒருவன், ரயில்வே "ஹெல்ப்லைன்' தொலைபேசி எண்ணுக்கு  தொடர்பு கொண்டு காலை 8 மணியிலிருந்து 9 மணிக்குள் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று தெரிவித்து விட்டு இணைப்பை துண்டித்துவிட்டான்.

இதனையடுத்து சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே ஐ.ஜி. உமா கணபதி சாஸ்திரி மேற்பார்வையில் ரயில்வே போலீஸ் எஸ்.பி. மனோகரன் தலைமையில் ரயில் நிலையம் முழுவதும் அங்குலம் அங்குலமாக சோதனை செய்யப்பட்டது.

பூக்கடை உதவி கமிஷனர் பாலசந்திரன் மேற்பார்வையில் மாநகர காவல் துறை போலீசாரும், ரயில்வே பாதுகாப்புப் படை, ரயில்வே போலீசார் ஆகியோர் இந்த வெடி குண்டு சோதனையில் ஈடுபட்டனர். அவர்களுடன் 5 மோப்ப நாய்களும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

ரயில் நிலைய முன்புற வாசல், பயணிகள் தங்குமிடம், பிளாட்பாரங்கள், ரயில் நிலையத்தில் உள்ள கடைகள், நின்று கொண்டிருந்த ரயில்களின் பெட்டிகள், பிளாட்பாரத்தில் வைக்கப்பட்டிருந்த பார்சல்கள், பயணிகளின் உடைமைகள் உள்பட அனைத்து இடங்களிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது. மேலும் ரயில் நிலைய பயணிகள் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

புறநகர் ரயில் நிலைய வாசல் பகுதியிலும் இந்த வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. சுமார் 4 மணி நேரம் நீடித்த இந்த  சோதனையில் எந்த வெடி குண்டும் சிக்கவில்லை. தொலைபேசியில் வந்த செய்தி வெறும் புரளி என்பது தெரிந்தது.

வெடிகுண்டு புரளியை கிளப்பியது யார்? என்று தொலைபேசி எண்ணை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வெடிகுண்டு மிரட்டல் காரணமாக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளிடையே சோதனை முடியும் வரை பெரும் பரபரப்பும் பதட்டமும் காணப்பட்டது.