அறிவியல் கணிதத்தில் சாதனை புரிவோம் - டாக்

Started by Sudhakar, Nov 02, 2008, 12:44 AM

Previous topic - Next topic

Sudhakar

மாணவர்களின் எண்ணங்களுக்கு சிறகு அளிக்கும் டாக்டர் அப்துல் கலாம், அறிவியல், கணிதப் பாடங்களின் முக்கியத்துவத்தை விளக்குகிறார்...


அறிவியல் மற்றும் கணித பாடங்களில் சிறந்து விளங்க வேண்டும் என்பதை நாம் லட்சியமாக கொள்ள வேண்டும் என்பதே என் ஆசை. இந்த பாடங்களை நடத்தும் ஆசிரியர்கள் அப்பாடங்களின் மீது பிடிப்பு கொண்டிருக்க வேண்டும். நேசிக்க வேண்டும்.

மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பதற்காக ஆசிரியர்கள் தகவல்களை சேகரித்து தயார் செய்து கொள்ள வேண்டும். மாணவர்கள் மத்தியில் அந்த பாடத்தில் ஈடுபாடு ஏற்படுத்த வேண்டும்.

அறிவியல் மற்றும் கணித ஆசிரியர்களுக்காக நம் நாட்டில் இரண்டு இ-லேர்னிங் வசதிகள் உள்ளன. நூற்றுக்கணக்கான பள்ளிகளும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களும் இவ்வசதியை பயன்படுத்தி வருகிறார்கள். தயார் நிலையில் உள்ள அறிவியல் மற்றும் கணிதத்தை அறிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் ஆசிரியர்களும் புதிய விஷயங்களை இங்கு அளிக்கலாம்.

இதுதொடர்பான விபரங்களை www.shikshaindia.org மற்றும் www.eshikshaindia.in ஆகிய இணைய தளங்களில் பார்வை யிடலாம். மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் http://www.sakshat.ac.in/ இணைய தளமும் இதே போன்ற வசதிகளை வழங்குகிறது.

சிக்கல்களை தீர்க்கவும், சவால்களை எதிர்கொள்ளவும் அறிவியல்தான் நமக்கு அறிவுக்கண்களை வழங்குகிறது. நம் மனதை நம்பிக்கையால் கட்டமைக்க வேண்டும். சிறந்த மனிதர், சிறந்த ஆசிரியர் மற்றும் சிறந்த புத்தகங்கள் ஆகிய மூன்றின் இணைப்பில்தான் இந்த நம்பிக்கை உருவாக்கப்பட வேண்டும்.

நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது, எங்கள் வகுப்பில் கணிதத்தில் 40 மதிப்பெண்களுக்கும் குறைவாகத்தான் பெரும்பாலானோர் எடுத்தோம். மற்ற பாடங்களில் 80 மதிப்பெண்கள் எடுக்கும் போது, கணிதத்தில் மட்டும் ஏன் இவ்வளவு குறைவாக மதிப்பெண் எடுக்கிறீர்கள் என்று எங்கள் ஆசிரியர் கேட்டார்.

அதன்பிறகு, கணித பாடம் நடத்தும் முறையில் மாற்றம் கொண்டு வந்து எங்களிடம் நம்பிக்கையை விதைத்தார். பாடம் நடத்தி முடித்தபின்னர் 10 கணக்குகளை கொடுத்தார். அவற்றில் வகுப்பிலிருந்த 90 சதவீத மாணவர்கள் நூற்றுக்கு நூறு எடுத்தனர். எங்கள் முகங்களில் எல்லாம் மகிழ்ச்சி பொங்கியது.

என்னால் முடியும் என்று மனதுக்குள் எழும் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வதுதான் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான வழிமுறை. நம்மால் முடியும் என்று நாம் உறுதிபூணும் போதுதான் நம் தேசத்தை நம்பிக்கையால் கட்டமுடியும்.

நான் செயின்ட் ஜோசப் கல்லுõரியில் பி.எஸ்சி., படிக்கும் போது, ஒவ்வொருநாள் காலையிலும் பேராசிரியர் தோதாத்ரி அய்யங்கார் கல்லுõரிக்கு நடந்து வரும் தெய்வீக தோற்றத்தை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

அவர் நடந்து வரும்போதே ஞான ஒளி வீசும். தலைசிறந்தவரான இவர் எங்களுக்கு ஆசிரியர். பழங்கால இந்திய கணித மேதைகளைப் பற்றி எங்களுக்கு உரையாற்றியவர். ஆர்யபட்டா, சீனிவாச ராமானுஜன், பிரம்மகுப்தா, பாஸ்கராச்சார்யா உள்ளிட்டோரை எங்களுக்கு அவர் அறிமுகப்படுத்தினார். அவரது உரைகள் இன்றும் என் காதுகளில் இனிய ஒலியாக ரீங்காரமிடுகிறது.

இந்த ஆண்டு ஏப்ரலில் நான் பின்லாந்து சென்றிருந்தேன். அங்கு 7 வயதில்தான் மாணவர்கள் முதல் வகுப்பில் சேர்கிறார்கள். 37 வயது வரை அவர்கள் சமூகத்துக்கு பொறுப்புள்ளவர்களாக நடந்து கொள்வது பற்றி கற்பிக்கப்படுகிறார்கள். என்னால் முடியும் என்ற நம்பிக்கை உடையவர்களாக ஆக்கப்படுகிறார்கள்.

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (ஓ.இ.சி.டி.,) சார்பில் சர்வதேச மாணவர் மதிப்பீட்டு திட்டத்தின்படி சர்வே மேற்கொள்ளப்படுகிறது. 15 வயதுக்குட்பட்ட மாணவர்களின் வாசிப்புத் திறன், அறிவியல் மற்றும் கணித திறன்கள் மதிப்பிடப்படுகின்றன. இந்த சர்வே நடத்தப்பட்ட நாடுகளிலேயே பின்லாந்து மாணவர்கள்தான் முதலிடம் பெற்றிருக்கின்றனர். சர்வேயின் அடிப்படை நோக்கம் படித்த அறிவை எப்படி சமுதாயத்துக்கு ஏற்ப பயன் உள்ளதாக மாற்றிக் கொள்ள முடியும் என்பதே.

பின்லாந்தில் ஒரே சீராக பரவியிருக்கும் திறமைதான் இந்த வெற்றிக்கு காரணம். தரமான ஆசிரியர்கள், தொடர்ந்து அளிக்கப்படும் ஆசிரியர் பயிற்சி மற்றும் பின் தங்கும் மாணவர் மீதான தனி கவனிப்பு ஆகியன இந்த சர்வேயில் கருத்தில் கொள்ளப்பட்டன.

பின்லாந்து இந்த வெற்றி அடைந்ததற்கான காரணங்கள் உண்டு. அவை:

1.ஆசிரியர்கள் தங்கள் திறனை மாணவர்களிடம் பிரதிபலித்தல்

2.கற்றுக்கொள்ளும் விருப்பத்துடன் தனிப்பாதை வகுத்து ஆசிரியர்கள் நடத்தல்

3.அறிவியல் கல்விக்கான பயிற்று முறைகளை ஆசிரியர்களே கண்டறிதல்

4. நடத்தும் பாடங்கள் மாணவர்களுக்கு சென்று சேர்ந்திருக்கிறதா என்பதற்கான வகுப்பறை அடிப்படையிலான ஆய்வு செய்தல்

5. ஆசிரியர்கள் தாங்கள் பாடம் நடத்தும் உத்திகள் அளிக்கும் பலன் அடிப்படையில் அவற்றை மாற்றி அமைத்தல்

6. கூடுதல் பயிற்சி தேவைப்படும் பட்சத்தில் ஆசிரியர்கள் அதை கேட்டு பெறும் வசதி இவையே பின்லாந்து மாணவர்களின் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளன.



இதேபோன்ற சாதனையை நாமும் செய்ய வேண்டும் என்றால்... அறிவியல் மற்றும் கணிதத்தில் மாணவர் புரிந்து கொள்வதற்கு செய்ய வேண்டியது என்ன... சரியான சொல்லிக்கொடுக்கும் முறைகள் மற்றும் உத்திகள் என்ன... மாணவர்கள் புரிந்து கொண்டார்களா என்பதை அறிந்து கொள்வது எப்படி என்பதை பற்றி சிந்திக்க வேண்டும். மாணவர்களிடம் ஆசிரியர்கள் கேள்விகள் கேட்க வேண்டும்.

சர்.சி.வி.ராமனுக்கு 1954ம் ஆண்டு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது. குடியரசு தினத்துக்குப் பின் கடைசி வாரத்தில் இந்தியாவின் உயரிய இவ்விருதை பெற்றுக் கொள்ள ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத், ராமனுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

ஆனால் ஜனவரி 31ம் தேதிக்குள் மாணவர்களின் ஆய்வு அறிக்கையை முடிக்க வேண்டியிருப்பதால் விழாவுக்கு வர இயலாத நிலையில் இருப்பதாக கடிதம் எழுதிவிட்டார். தனக்கு கிடைக்கும் நாட்டின் உயரிய விருதை விட, மாணவர்களின் நலன் முக்கியம் என்று கருதியவர் அவர். அவர் போன்று மாணவர்களுக்கு ஆசிரியர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அறிவியல் செழிக்கும்.

மீண்டும் சந்திப்போம்

உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

-டாக்டர் அப்துல் கலாம்