சந்திராயன் விண்கலத்தை வடிவமைத்த மயில்சா

Started by Kalyan, Oct 24, 2008, 11:55 AM

Previous topic - Next topic

Kalyan

சந்திராயன் விண்கலத்தை வடிவமைத்த மயில்சாமி அண்ணாதுரை!!!

இந்தியா நிலவுக்கு அனுப்பியுள்ள சந்திராயன் விண்கலத்தை வடிவமைத்ததில் முக்கிய பங்காற்றியுள்ளார் இஸ்ரோ விஞ்ஞானியான பொள்ளாச்சியைச் சேர்ந்த மயில்சாமி அண்ணாதுரை.

இந்தியாவை உலக விண்வெளி அரங்கில் உயரிய இடத்தில் நிறுத்த உதவும் சந்திராயன் விண்கலம், இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த சந்தோஷத்தே நாடே கொண்டாடி வருகிறது. இந்த சந்தோஷத்தின் பின்னணியில் ஒரு தமிழர் இருக்கிறார் என்பதில் தமிழகமும் பெருமை கொண்டுள்ளது.

அவர் மயில்சாமி அண்ணாதுரை. இவர் சந்திராயன் திட்டத்தின் இயக்குனராக செயல்பட்டவர்.

அண்ணாதுரை கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கொத்தவாடி கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை பெயர் மயில்சாமி. கோவை அரசு பொறியியல் கல்லூரி மற்றும் பி.எஸ்.ஜி. பொறியியல் கல்லூரிகளில் படித்தவர் அண்ணாதுரை.

1982ம் ஆண்டு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வுக் கழகப் பணியில் சேர்ந்தார்.

நிலாவுக்கு செயற்கைக் கோளை அனுப்ப வேண்டும் என்று வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்ததும் இஸ்ரோ அதற்கான நடவடிக்கைகளை முடுக்கி விட்டது. இதற்காக முதலில் தனிக் குழு ஏற்படுத்தப்பட்டது. இந்தக் குழுவிடம் சந்திராயன் விண்கலத்தை வடிவமைக்கும் பொறுப்பு விடப்பட்டது.

இதுதொடர்பான குழுவின் தலைவராக, திட்ட இயக்குநராக அண்ணாதுரை நியமிக்கப்பட்டார். இதையடுத்து களத்தில் இறங்கிய அண்ணாதுரை, இரவு பகலாக தன்னை இப்பணியில் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டார்.

விண்கலத்தின் முக்கிய பகுதிகளின் செயல்பாடுகள் உள்ளிட்டவற்றை இவரே தீர்மானித்தார். மொத்தமே ரூ. 386 கோடியில் சந்திராயனை அண்ணாதுரை தலைமயிலான குழு உருவாக்கியது.

இதுவே வெளிநாட்டில் தயாரிப்பதாக இருந்தால் பல ஆயிரம் கோடிகளைத் தாண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் ஏவுகணைத் திட்டம் இன்று கொடி கட்டிப் பறக்க முக்கிய காரணம் அப்துல் கலாம். அந்த வரிசையில் தற்போது சந்திராயன் பயணத்திற்கான பிள்ளையார் சுழியை இந்தியா போட முக்கிய காரணமாக அமைந்துள்ளார் தமிழரான அண்ணாதுரை என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திராயன் வெற்றிகரமாக ஏவப்பட்டது குறித்து அண்ணாதுரை கூறுகையில், எங்களது குழந்தை நிலவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்றார் புன்னகையுடன்.

சந்திராயன் விண்கலத்தை நாம் ஏவி விட்டாலும் கூட அதன் பயணம் முழமையாக முடியும் வரை விஞ்ஞானிகள் பதை பதைப்புடன்தான் இருப்பார்கள். காரணம், சந்திராயன் பயணத்தின் தன்மை அப்படி.

இதுவரை நாம் புவி வட்டப் பாதை வரைக்கு மட்டும்தான் விண்கலங்களை அனுப்பியுள்ளோம். பூமியிலிருந்து நிலவு 4 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்தத் தொலைவை சந்திராயன் திட்டமிட்டபடி படிப்படியாக கடக்க வேண்டும். எனவே இது சிக்கலான ஒன்றுதான் என்கிறார் பெங்களூரில் உள்ள இஸ்ரோ செயற்கைக் கோள் மையத்தின் இயக்குநரான அலெக்ஸ்.