இந்திய ரூபாய்க்கான சின்னத்தை உருவாக்கிய

Started by rajoe, Jul 16, 2010, 11:37 AM

Previous topic - Next topic

rajoe

[smg id=7555 type=full]
சென்னை: இந்திய ரூபாய்க்கான சின்னத்தை உருவாக்கிய உதயக்குமார் சென்னையைச் சேர்ந்த தமிழர் ஆவார்.

டாலர், யூரோ, யென் போன்றவற்றுக்கு தனி அடையாளச் சின்னம் உள்ளது. அந்த மதிப்பு மிகுந்த நாணய வரிசையில் தற்போது இந்திய ரூபாயும் சேருகிறது. இந்திய ரூபாய்க்கான தனி சின்னத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

மும்பை ஐஐடியில் படித்தவரான உதயக்குமார் என்பவர்தான் இதற்கான சின்னத்தை வடிவமைத்துள்ளார்.

தண்டையார்பேட்டையில் வசித்து வரும் உதயக்குமார் திமுக குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை தர்மலிங்கம் முன்னாள் எம்.எல்.ஏ ஆவார். தாயார் பெயர் ஜெயலட்சுமி. சொந்த ஊர், விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மரூர் ஆகும்.

உதயகுமாருக்கு ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் உண்டு. ஓவியத்துக்காக பல பரிசுகள் பெற்று உள்ளார்.

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள லீ சாட்லியர் உறைவிட ஜுனியர் கல்லூரியில் பிளஸ்-2 வரை படித்த உதயகுமார், பின்னர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து பி.ஆர்க் பட்டம் பெற்றார். பி.ஆர்க் படிப்பில் மாநிலத்திலேயே முதல் மாணவராக தேர்வு பெற்றார்.

அதன்பிறகு மும்பை ஐ.ஐ.டி.யில் தொழில் டிசைனிங் பிரிவில் (விஷுவல் கம்யூனிகேஷன்) முதுகலை பட்டம் பெற்றார். அங்கு பி.எச்டி. ஆய்வையும் முடித்து பட்டம் பெற்றுள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பரில், தான் வடிவமைத்த அடையாள குறியீட்டை அனுப்பி வைத்தார். கடும் போட்டிக்கு மத்தியில் உதயக்குமாரின் டிசைன் தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த டிசைனைத்தான் நேற்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தது. அடுத்து உலகம் முழுவதும் இது பரவப் போகிறது.

இந்த பெரும் கெளரவம் குறித்து உதயக்குமார் கூறுகையில், என்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. உண்மையில் மெய்சிலிர்த்து போய் இருக்கிறேன்.

ரூபாய்க்கான அடையாள குறியீட்டை இந்திய எழுத்தில் வடிவமைத்து இருந்தேன். போட்டியில் நான் வெற்றி பெற இதுவே காரணம் என்று நினைக்கிறேன் என்றார்.

உதயக்குமார் குவஹாத்தி ஐஐடியில் உதவிப் பேராசிரியராக இன்று பதவியேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.