உன்னை கண் தேடுதே...!

Started by Power of silence, Sep 02, 2009, 05:25 PM

Previous topic - Next topic

Power of silence

உலக மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஒவ்வொரு ஏழாவது மனிதனும் இந்தியன். ஆனால், உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கெடுப்பின்படி, ஒவ்வொரு மூன்றாவது அல்லது நான்காவது பார்வையிழந்தவனும் இந்தியன். நம் நாட்டில் இரண்டு கோடியே 70 லட்சம் பேர், பார்வை குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இவர்களில், மூன்று லட்சத்து 20 ஆயிரம் பேர், குழந்தை பருவத்திலேயே இந்த பாதிப்புக்குள்ளாகிவிடுகின்றனர். பார்வை குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களில், 46 லட்சம் பேர் கார்னியல் பார்வை கோளாறு என்னும், குறிப்பிட்ட கண் நோயால் பார்வையை இழந்திருக்கின்றனர். இவர்களில், 90 சதவீதம் பேர் 45 வயதிற்கும் குறைவானவர்கள். 60 சதவீதம் பேர் 12 வயதுக்கும் குறைவான குழந்தைகள். இவர்களுக்கு மீண்டும் பார்வை கிடைப்பது, கண் தானம் மூலமாக செய்யப்படும் கார்னியல் மாற்று அறுவைச் சிகிச்சையால் மட்டுமே சாத்தியம்.


கண் வங்கி: கண் தானத்தின் மூலமாக கார்னியல் மாற்று ஆபரேஷன் செய்வதன் மூலம், பார்வையை வழங்க முடியும் என்பதை வலியுறுத்த, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 25ம் தேதி முதல் செப்டம்பர் 8ம் தேதி வரை தேசிய கண் தான இரு வார விழா அனுசரிக்கப்படுகிறது. நிறைவு நாளான � சப்டம்பர் 8ம் தேதி தேசிய கண் தான நாளாக அனுசரிக்கப்படுகிறது. இறந்தவர்களுடைய கண்களை தானமாகப் பெற்றுக்கொள்ள, அவர்களுடைய நெருங்கிய உறவினர்கள், கண் வங்கி அலுவலர்களுக்கு, உரிய நேரத்தில் அனுமதி அளிப்பது தான் கண் தானம்.


இறந்தவர்களுடைய கண்களை தானமாக பெற்று, மதிப்பீடு செய்து, முறைப்படி பாதுகாத்து, கார்னியல் மாற்று அறுவைச் சிகிச்சைக்காக வினியோகிக்கும் அமைப்பு, கண் வங்கி எனப்படுகிறது. கார்னியா பாதிப்பு: நம் கண்ணுக்கு முன்புறம், கருவிழிக்கும் முன்னால், நிறமேயில்லாத, ஒளி ஊடுருவிச் செல்லக்கூடிய, ரத்தக் குழாய்கள் எதுவுமேயில்லாத, ஒரு மெல்லிய திசு, கண்ணுக்கு ஒரு கண்ணாடி ஜன்னலைப் போல அமைந்துள்ளது. அதுவே கார்னியா எனப்படும். தமிழில், "விழி வெண்படலம்' என்பர்.


கார்னியா பாதிக்கப்பட்டால், ஒளிக்கதிர்கள் உள்ளே செல்வது தடுக்கப்படுகிறது. விழித்திரையில் பிம்பம் படிவதில்லை. எனவே, பார்வை தெரிவதில்லை. அந்த வகையில் கார்னியா, கண்ணின் முக்கிய உறுப்பாக செயல்படுகிறது. தொற்றுநோய் கிருமிகள், விபத்து, ஊட்டச்சத்து குறைவு மற்றும் கண் சிகிச்சை குறைபாடு காரணமாக, சிலருக்கு பிறவியிலேயே அல்லது பரம்பரையாகவோ கார்னியா பாதிக்கப்படுகிறது. கார்னியாவை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றிவிட்டு, அங்கே தானமாக கிடைத்த கண்ணின் கார்னியா பகுதியை வைத்து மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.


பாதிப்புக்குள்ளானவர்கள் மீண்டும் பார்வை பெற கண் தானம் தேவைப்படுகிறது. யார் கண் தானம் செய்யலாம்?: ஒரு வயது நிரம்பிய குழந்தைகளின் கண்களிலிருந்து, வயது வரம்பின்றி அனைவரது கண்களும் தானமாக ஏற்றுக்கொள்ளப்படும். கண் தானம் செய்வதற்கு ஜாதி, மதம், இனம், மொழி, கலாசாரம், ஆண், பெண் பாகுபாடு இன்றி அனைவரது கண் தானமும் ஏற்றுக் கொள்ளப்படும். தொற்றுநோய் கிருமியின் காரணமாக இறப்பு, வெறிநாய்க்கடி, கல்லீரல் அழற்சி, மஞ்சல் காமாலை, எய்ட்ஸ், கார்னியாவில் வடுக்கள் போன்றவை இருப்பின் அவர்களது கண்கள் தானமாக ஏற்றுக்கொள்ளப்படாது.


கண் தானம் செய்ய விரும்புபவர்கள் செய்ய வேண்டியவை என்ன என்பது குறித்து சங்கர நேத்ராலாயாவின் மருத்துவ சமூகவியல் மற்றும் கண் வங்கி தலைவர் இருங்கோவேள் கூறியதாவது: நமக்கு தெரிந்த நண்பர்கள், உறவினர்கள் என யாரேனும் இறந்துவிட்டால், அவருடைய நெருங்கிய உறவினரை சந்தித்து ஊக்குவித்து, அவரது கண்களை தானம் செய்ய சம்மதிக்கச் செய்யலாம். அதன் பின், அருகில் உள்ள கண் வங்கியை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டால், கண் வங்கி அலுவலர்கள், உடல் இருக்கும் இடத்திற்கு வந்து கண்களை தானமாக பெற்றுக்கொள்வர்.


கண் தானம், மதச்சம்பிரதாயத்திற்கு எதிரானது அல்ல. கண்தானம் உட்பட அனைத்து உடல் உறுப்பு தானங்களையும், அனைத்து மதங்களும் ஓர் உயர்வான காரியமாகவே போற்றுகின்றன. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளவர்கள் தமக்கு தெரிந்து யாரேனும் மரணமடைந்து விட்டால், அவரது கண்களை தானம் செய்யும்படி, அவரது நெருங்கிய உறவினர்களை ஊக்குவித்து அவரது சம்மதத்துடன் 044-2828 1919 மற்றும் 044-2827 1616 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டால், மருத்துவர்கள் உடனடியாக உடலிருக்கும் இடத்திற்கு வந்து கண்களை தானமாக பெற்றுக்கொள்வர்.


மற்ற ஊர்களில் உள்ளவர்கள் அந்த ஊருக்கு அருகில் உள்ள ஏதேனும் ஒரு கண் வங்கியைத் தொடர்புகொண்டால், மருத்துவர்கள் உடனடியாக, மரணமடைந்தவரின் உடலிருக்கும் இடத்திற்கு வந்து கண்களை தானமாகப் பெற்றுக்கொள்வர். கண்தானம் குறித்து கருத்தரங்குகள் ஏற்பாடு செய்தால், சங்கரா நேத்ராலயாவின் மருத்துவ சமூகவியல் துறை அலுவலர்கள், கண் நலம் மற்றும் கண் தானம் பற்றி படவிளக்கங்களுடன் உரையாற்றுவர். இவ்வாறு இருங்கோவேள் தெரிவித்தார்.


சென்னையில் கிடைப்பது 4 ஜோடி கண்கள் தான்!: கண் தானம் செய்வதில், குஜராத் முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு நாடு முழுவதும் 33 ஆயிரம் கண்கள் தானமாக கிடைத்தன. இதில் 9,000 கண்கள் அறுவைச் சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்டு மீண்டும் ஒளி வீசின. மீதமுள்ள கண்கள் ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்பட்டன. நாட்டில் தற்போது 30 லட்சம் கண்களுக்கு தேவை உள்ளது. ஆண்டுதோறும் 90 ஆயிரம் பேர் கண்கள் வேண்டி பதிவு மேற்கொள்கின்றனர்.


சென்னை மாநகராட்சியில், சராசரியாக 119 இறப்பு பதிவுகள் நாள்தோறும் மேற்கொள்ளப்படுகிறது. இவற்றில் நான்கு ஜோடி கண்கள் மட்டுமே தானமாக கிடைத்து வருகின்றன. கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமை: இறந்தவரின் கண்களை தானம் தருவது தொடர்பாக, கண் வங்கியை தொடர்பு கொண்ட பின், உறவினர்கள் சில நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அவை: கண்களை மூடி, இரண்டு கண்களின் மீதும் ஈரமான பஞ்சு அல்லது ஐஸ் கட்டிகளை இமைகளின் மீது வைத்து, கார்னியா ஈரப்பதமுடன் இருக்க உதவ வேண்டும்.


தலைக்கு நேராகச் சுழலும் மின்விசிறிகளை நிறுத்திவிட வேண்டும். தலையை ஆறு அங்குல உயரத்திற்கு, இரண்டு தலையணைகளை வைத்து உயர்த்தி வைக்க வேண்டும். டாக்டர்கள் வரும் வரை, இரண்டு கண்களிலும், ஏதேனும் ஆண்டிபயாட்டிக் சொட்டு மருந்துகளை குறிப்பிட்ட இடைவெளிவிட்டு போடலாம். இது கண்களில் தொற்றுநோய் கிருமிகள் பரவாமல் தடுக்கும்.கண்களை அகற்றிய பின், முகம் விகாரமடைந்துவிடும் என பலரும் நினைக்கின்றனர். ஆனால், தானம் தந்த மனிதரின் கண்களை எடுத்த அடையாளம் கூட தெரியாது.
நகல் எடுக்க         |    எ