கண்ணிவெடிகளை அகற்றியதும் தமிழர்கள் குடி

Started by sharmila banu.m, Jun 10, 2009, 07:12 PM

Previous topic - Next topic

sharmila banu.m

கண்ணிவெடிகளை அகற்றியதும் தமிழர்கள் குடியேற்றம்: இலங்கை பார்லியில் தகவல்


கொழும்பு: இலங்கையில் தமிழர்கள் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என, இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹிதபொகோலகாமா தெரிவித்துள்ளார். இது குறித்து இலங்கைப் பார்லிமென்டில் அவர் மேலும் கூறியதாவது: இலங்கையில் ராணுவத்துக்கும் - புலிகளுக்கும் நடந்த சண்டையையடுத்து, மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள், பல்வேறு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.


அவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளை இலங்கை அரசு செய்து வருகிறது. தமிழர்களை அவர்களது சொந்தப் பகுதிகளில் மீண்டும் குடியமர்த்துவது தொடர்பாக, அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்த ஆண்டு முடிவிற்குள், அதாவது இன்னும் ஆறு மாதங்களில் 80 சதவீத மக்கள், அவர்களது சொந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்தப்படுவர். வன்னி பகுதியில், புலிகளால் ஏராளமான கண்ணிவெடிகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. மீண்டும் அப்பகுதியில் மக்கள் வசிக்க வசதியாக கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்கு முன்னதாக, அங்குள்ள கண்ணிவெடிகள் முற்றிலுமாக அழிக்கப்படவேண்டும். இவ்வாறு ரோஹிதபொகோலகாமா பேசினார்.


பார்லிமென்டில் பேசிய பிரதமர் விக்கிரமசிங்கே, "பயங்கரவாதத்தின் சாயல் சிறிதும் இல்லாமல் அழித்து விடுவோம்; இல்லாவிட்டால், அது காட்டுத்தீ போன்று பரவிவிடும். புலிகள் இயக்கம் துவங்கிய போதே அழித்திருந்தால், இவ்வளவு பிரச்னை வந்திருக்காது' என்றார். இதற்கிடையே, புலிகள் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட கண்ணிவெடிகள் புதைத்து வைக்கப்பட்டிருந்ததாக, இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நானயகாரா கூறினார். இலங்கை சென்றுள்ள இந்தியப் பத்திரிகையாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: இலங்கையில் புலிகள் ஒழிக்கப்பட்ட பின், புலிகளின் ரகசிய அமைப்புகள் மீது கவனத்தைச் செலுத்தி வருகிறோம்.


தற்போது, வடக்குப்பகுதியில் புலிகள் தரப்பில் எவரும் இல்லை. புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த இடங்களிலிருந்து கையெறிக் குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கைப்பற்றியிருக்கிறோம். அபாயம் நிறைந்த ஆயுதங்களை முற்றிலுமாக அழிக்காமல், தமிழர்களை அவர்களது இடத்தில் மீண்டும் குடியமர்த்துவது என்பது முடியாத காரியம். புலிகளின் இரண்டாம், மூன்றாம் கட்டத்தில் செயல்பட்டத் தலைவர்களில் சிலர் தலைநகர் கொழும்பு உள்ளிட்டப் பல பகுதிகளில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. விரைவில் அவர்களைக் கைது செய்வோம். இவ்வாறு உதய நானயகாரா கூறினார்.



SOURCE - MERINEWS
DATE - 10.06.09