இன்ஜி., 'கவுன்சிலிங்' விதிமுறைகள் என்ன?

Started by Kalyan, May 26, 2009, 09:01 AM

Previous topic - Next topic

Kalyan

இன்ஜி., 'கவுன்சிலிங்' விதிமுறைகள் என்ன?

"கவுன்சிலிங்'கிற்கு விண்ணப்பிக்கும் போது என்னென்ன செய்ய வேண்டும்' என்று சென்னை அண்ணா பல்கலை., மாணவர் சேர்க்கை செயலாளர் ரேமண்ட் உதரியராஜ் விளக்கினார். மதுரையில் தினமலர் மற்றும் சிவகாசி பி.எஸ்.ஆர்., இன்ஜினியரிங் கல்லூரி இணைந்து நடத்திய "உங்களால் முடியும்' நிகழ்ச்சியில், தமிழ்நாடு இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை செயலாளர் ரேமண்ட் உதரியராஜ் பேசியதாவது:

அனைத்து பொறியியல் பாடங்களுமே சிறந்தவை தான். ஒவ்வொன்றுக்கும் என்ன எதிர்காலம் என அறிவது முக்கியம். இதைக் கவனத்தில் கொண்டு தான் ஒரு பாடத்தை அறிமுகம் செய்கின்றனர். கல்லூரியை தேர்வு செய்யும் முன், அடிப்படை வசதிகள் இருக்கிறதா? ஆய்வகம், கருவிகள் இருக்கிறதா? நல்ல ஆசிரியர்கள் இருக்கின்றனரா? எப்படிப்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர் போன்றவற்றை பார்க்க வேண்டும். எவ்வளவு செலவாகும் என்றும் கவனிக்க வேண்டும். நமது பிள்ளைகளுக்கும் குடும்ப சூழ்நிலை தெரிய வேண்டும். விண்ணப்பம்: தமிழகத்தில் உள்ள 354 கல்லூரிகளுக்கும் ஒற்றை சாளர அடிப்படையில் சேர்க்கை நடக்கிறது. மே 30 வரை விண்ணப்பங்கள் தரப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சேர்ப்பிக்க கடைசி நாள் மே 31. நேற்று (மே 24) வரை ஒரு லட்சத்து 53 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்றுள்ளன. கல்லூரிகளில் மொத்தம் உள்ள இடங்கள் ஒரு லட்சத்து 35 ஆயிரம். இதில் கவுன்சிலிங் மூலம் 85 ஆயிரம் இடங்கள் நிரப்பப்படும். மீதி நிர்வாக ஒதுக்கீட்டில் நிரப்பப்படுகிறது. தமிழ்நாட்டில் 8ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்தவர்களுக்கு "நேடிவிட்டி' சான்றிதழ் தேவையில்லை. இந்த வகுப்புகளை வெளி மாநிலங்களில் படித்தவர்கள் "நேட்டிவிட்டி' சான்றிதழ் தர வேண்டும். வெளி மாநிலத்தைச் சேர்ந்த பெற்றோர் தமிழகத்தில் 5 ஆண்டுகள் வசித்திருந்தால், "ஓப்பன்' பிரிவின் கீழ் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்துடன் அசல் சான்றிதழ்களை இணைக்கக் கூடாது, நகல்களை இணைத்தால் போதும். "அட்டெஸ்டேஷன்' தேவையில்லை. மதிப்பெண்கள்: கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களின் சராசரியை (சதவீதம்) கணக்கிட வேண்டும்.

"ஓப்பன்' பிரிவின் கீழ் விண்ணப்பிப்போர் 55 சதவீதத்திற்கு மேலும், பிற்பட்டோர் 50 சதவீதத்திற்கு மேலும், மிகப்பிற்பட்டோர் 45 சதவீதத்திற்கு மேலும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் "பாஸ்' செய்திருத்தலும் வேண்டும். ரேங்க் பட்டியல்: கட்-ஆப் அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கும்போது ஒரே மதிப்பெண்ணில் பலர் இருந்தால், முதலில் கணிதமும், அதிலும் "டை' வந்தால் இயற்பியல் பாடமும் கணக்கில் எடுக்கப்பட்டு, ரேங்க் தரப்படும். அதிலும் "டை' வந்தால் உயிரியல் பாடம் கணக்கிடப்படும். அதிலும் "டை' என்றால், பிறந்த தேதி பார்க்கப்படும். அதன் பிறகு தான் "ரேண்டம் எண்' முறை பின்பற்றப்படும். இப்படி வருவது மிகவும் அரிதானது. மறு மதிப்பீடுக்கு விண்ணப்பிப்போர், இப்போது உள்ள மதிப்பெண்ணின் அடிப்படையில் விண்ணப்பித்தால் போதும். ஜாதி சான்றிதழ் நகல் இல்லாதவர்கள் விண்ணப்பித்துவிட்டு கூட, அதைப் பெற்று, சமர்ப்பிக்க வேண்டும்.

பிறந்த தேதியில் மாற்றம் இருந்தாலும் உடனே தகவல் தர வேண்டும். விண்ணப்பத்தை உடனடியாக அனுப்புங்கள். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் பதற வேண்டாம். என்ன ஆவணம் இல்லையோ அதை உடனே அனுப்பி வைக்கலாம். கவுன்சிலிங்: கவுன்சிலிங்கிற்கு வரும்போது, நீங்கள் தேர்வு செய்த கல்லூரிகளின் சென்ற ஆண்டு "கட்-ஆப்' என்ன என தெரிந்து வர வேண்டும். அண்ணா பல்கலை., இணையதளத்தில் சென்ற ஆண்டு ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உங்கள் மதிப்பெண்ணுக்கு எந்தக் கல்லூரியில் என்ன பாடப்பிரிவு கிடைத்துள்ளது என பாருங்கள். முதலிலேயே கல்லூரிகளுக்கு சென்று பாருங்கள். சிறப்பு ஒதுக்கீடுகள்: விளையாட்டு, முன்னாள் படைவீரர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள் குடும்பங்களுக்கு சிறப்பு ஒதுக்கீடும் இருக்கின்றன.

அழைப்பு கடிதம் வந்ததும் அது சரியாக இருக்கிறதா என பார்க்க வேண்டும். கவுன்சிலிங்கின் போது பொதுப்பிரிவினர் 5 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செலுத்த வேண்டும். பணத்தைக் கொண்டு வந்து அண்ணா பல்கலை., வளாகத்திலேயே வங்கியில் செலுத்தலாம். கவுன்சிலிங்கின் போது கல்லூரிகளை தேர்வு செய்ய உங்களுக்கு போதிய அவகாசம் தரப்படும். தரகர்கள் பேச்சை நம்ப வேண்டாம். இவ்வாறு அவர் பேசினார்.