மாறுதல் கவுன்சிலிங்: காலியிடம் வெளியீடு

Started by Kalyan, May 26, 2009, 09:02 AM

Previous topic - Next topic

Kalyan

மாறுதல் கவுன்சிலிங்: காலியிடம் வெளியீடு


பள்ளிக் கல்வித்துறை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கவுன்சிலிங் நாளை முதல் நடைபெறவுள்ள நிலையில், மாவட்ட வாரியாக காலிப் பணியிடம் உள்ள ஊரின் விவரம் பள்ளிக் கல்வி இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.


தென்மாவட்டங்களை விட, வட மாவட்டங்களில் அதிக பணியிடங்கள் காலியாக உள்ளன. பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஜூன் 1ம் தேதி நிலவரப்படி ஏற்படும் காலி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான கவுன்சிலிங், நாளை முதல் துவங்குகிறது. தற்போது பணிபுரிந்து வரும் ஆசிரியர்களில் அவர்களின் பணி மூப்பு அடிப்படையில், பணியிட மாறுதல் உத்தரவு வழங்கப்பட உள்ளன. உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களின் காலியிட விவரங்கள், பள்ளிக் கல்வித் துறை இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. (www.pallikalvi.in) கவுன்சிலிங் மையத்தில் காலிப் பணியிட விவரங்கள் பட்டியலாக வெளியிடப்பட உள்ளன. முன்கூட்டியே இணைய தளம் மூலமாகவும் காலியிட விவரங்களை ஆசிரியர்கள் தெரிந்து கொள்ளலாம். தென்மாவட்டங்களை விட, வடமாவட்டங்களில் அதிக பணியிடங்கள் காலியாக உள்ளன.




மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடத்தை பொறுத்தவரை, அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 24 பணியிடங்கள், திருவண்ணாமலை மாவட்டத்தில் 15, வேலூர் மாவட்டத்தில் 24, விழுப்புரம் மாவட்டத்தில் 24, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 12 பணியிடங்கள் காலியாக உள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில் ஏழு பணியிடங்கள் இருக்கின்றன. உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் அதிகபட்சமாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் 23, விழுப்புரம் மாவட்டத்தில் 11, சேலம் மாவட்டத்தில் 18, ராமநாதபுரம் மாவட்டத்தில் 16, திருவள்ளூர் மாவட்டத்தில் 13, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10 பணியிடங்களும் காலியாக இருக்கின்றன. இதர ஆசிரியர் பணியிடங்களும் வட மாவட்டங்களில் அதிகம் உள்ளன.கவுன்சிலிங் நிகழ்ச்சியை எந்தவித பிரச்னையும் இன்றி சுமூகமாக நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. பள்ளிக் கல்வி இயக்குனர் பெருமாள்சாமி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.




கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து இயக்குனர் கூறியிருப்பதாவது: கவுன்சிலிங் துவங்குவதற்கு முன், காலியிட விவரங்களை அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும். கவுன்சிலிங் நடக்கும் இடத்தில் ஒலிபெருக்கி வசதி செய்ய வேண்டும். கவுன்சிலிங் விதிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். கவுன்சிலிங் நடைபெறும் அதே நாளில், பணியிட மாறுதல் பெற்ற ஆசிரியர்களுக்கு அதற்கான உத்தரவு வழங்கப்பட வேண்டும். ஒளிவு மறைவற்ற வகையில், வெளிப்படையான முறையில் கவுன்சிலிங்கை நடத்த வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதை மனதில் கொண்டு, எந்தவித புகார்களுக்கும் இடமின்றி, விதிகளை மீறாமல் கவுன்சிலிங்கை நடத்துவதற்கு முதன்மைக் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கவுன்சிலிங் குறித்து ஏதாவது புகார்கள் வந்தால், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு இயக்குனர் தெரிவித்துள்ளார்.




சென்னையில் நடக்கும் கவுன்சிலிங் விவரம்: மாநில அளவில் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதலுக்கான கவுன்சிலிங், அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாளை நடக்கிறது. உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங், 28ம் தேதி எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. சென்னை மாவட்டத்திற்குள் மாறுதல் பெற விரும்பும் ஆசிரியர்களுக்கும் (தலைமை ஆசிரியர் தவிர்த்து), மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல விரும்பும் ஆசிரியர்களுக்கும் 27, 29ம் தேதிகளில் சைதாப்பேட்டை அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கவுன்சிலிங் நடக்கிறது. 27ம் தேதி மாவட்டத்திற்குள் மாறுதல் பெறுபவர்களுக்கும், 29ம் தேதி வெளி மாவட்டங்களுக்கு மாறுதல் பெறுபவர்களுக்கும் கவுன்சிலிங் நடக்கிறது.