சென்னைக்கு மெட்ரோ ரயில் திட்டம் மத்திய அī

Started by VelMurugan, Jan 17, 2009, 09:42 AM

Previous topic - Next topic

VelMurugan

சென்னைக்கு மெட்ரோ ரயில் திட்டம் மத்திய அமைச்சரவை விரைவில் ஒப்புதல்

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கனவே பொது முதலீட்டு ஆணையம் மற்றும் திட்டக்கமிஷன் ஆகியவற்றின் அனுமதிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் 15 நாட்களுக்குள் மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்துவிடும் வாய்ப்பு உருவாகியுள்ளது.டில்லியில் உள்ள மெட்ரோ ரயில் போக்குவரத்து போல சென்னையிலும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கத்தில் மெட்ரோ ரயில் திட்டம் தீட்டப்பட்டது.


14 ஆயிரத்து 600 கோடி ரூபாய் செலவில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டு மத்திய மாநில அரசுகள் பரிசீலித்து வந்தன. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்துள்ளது. இந்த தகவலை நகர்ப்புற மேம்பாட்டு அமைச் சக வட்டாரங்கள் நேற்று டில்லியில் உறுதி செய்தன. இந்த ஒப்புதல் கடந்த பொங்கல் தினமான புதன்கிழமை அன்று அளிக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய அமைச்சரவைக் கூட்டத்தின் ஒப்புதலுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


மேலும் அந்த வட்டாரங்கள் கூறியதாவது:ஜப்பான் நாட்டு வங்கி மூலம் 9,000 கோடி ரூபாய் கடனாக பெறப்பட்டு அதாவது மொத்த திட்டச் செலவில் 59 சதவீதத்தை கடனாக பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டச் செலவின் 15 சதவீதத்தை மத்திய அரசும் 15 சதவீதத்தை தமிழக அரசும் ஏற்றுக் கொள்ளவுள்ளது.வரும் பிப்ரவரி மாதம் வாக்கில் மத்திய மாநில அரசு பிரதிநிதிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு செல்ல வுள்ளனர். அந்நாட்டு வங்கியிடம் கடன் பெறுவது தொடர்பான சம்பிரதாய வேலைகளை முடித்து விட்டு திரும்ப முடிவுசெய்யப்பட்டுள்ளது.


அதன் பின் ஏப்ரல் அல்லது மார்ச் மாதம் வாக்கில் மெட்ரோ ரயில் திட்டத்தின் ஆரம்ப கட்ட பணிகள் துவங்கப்படும். மளமளவென பணிகள் வேகம்பிடித்து 2014ம் ஆண்டு நிறைவடையும்.சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மொத்தம் 46.5 கி.மீ., தூரம் உள்ள இரண்டு பாதைகள் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டு பணிகள் ஆரம்பமாகும். வண்ணாரப்பேட்டையிலிருந்து அண்ணாசலை வழியாக விமான நிலையம் வரை உள்ள 23 கி.மீ., தூரம் ஒரு பாதையாகவும் கோட்டையிலிருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக பரங்கிமலை வரை உள்ள 23.5 கி.மீ. தூரம் மற்றொரு பாதையாகவும் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.


இதில் முதல் பாதையான வண்ணாரப்பேட்டை-விமான நிலையம் பாதை அண்ணா சாலையில் 14 கி.மீ., தூரத்திற்கு பூமிக்குள் சுரங்க ரயில் பாதையாக அமைக்கப்படும். மீதமுள்ள தூரம் பூமிக்கு மேலேயே வெளியில் அமைக்கப்படும்.இந்த திட்டத்தை சென்னை மெட்ரோ ரயில் கார்பரேஷன் மற்றும் மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும். இந்த திட்டத்திற்கு ஏற்கனவே பொது முதலீட்டு ஆணையமும், திட்டக்கமிஷனும் அனுமதியளித்துவிட்டது.


தற்போது மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகமும் தனது அனுமதியை அளித்து விட்ட நிலையில் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஓரிரு அமைச்சரவைக் கூட்டங்களுக்குள் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்துவிடும் வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Source : தினமலர்