என்.ஐ.டி., அந்தஸ்து கோரும் புதுச்சேரி இன்ஜி&#

Started by Sudhakar, Oct 24, 2008, 01:38 AM

Previous topic - Next topic

Sudhakar

புதுச்சேரி: புதுச்சேரி இன்ஜினியரிங் கல்லூரியை என்.ஐ.டி.,யாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

புதுச்சேரியில் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி (என்.ஐ.டி.,) கல்வி நிறுவனத்தை தொடங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி இன்ஜினியரிங் கல்லூரியை என்.ஐ.டி.,யாக தரம் உயர்த்த வேண்டும் என்று அக்கல்லூரி முதல்வர் வி. பிருத்விராஜ், புதுவை முதல்வர் வைத்தியலிங்கத்திடம் மனு அளித்துள்ளார்.

மத்திய மனித  வளமேம்பாட்டு அமைச்சகத்தின் நிதியுதவியுடன் புதுச்சேரி இன்ஜினியரிங் கல்லூரி 25 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. தற்போது போதிய நிதி வசதி இல்லாமல் இக் கல்லூரி உள்ளது. ஆண்டுதோறும் ரூ.9 கோடி நிதியை புதுவை அரசு இக்கல்லூரிக்கு வழங்குகிறது. ஆனால் என்.ஐ.டி.,களுக்கு ரூ.100 கோடி அளவுக்கு நிதி கிடைக்கிறது. புதுச்சேரி இன்ஜினியரிங் கல்லூரிக்கு 300 ஏக்கர் நிலம் உள்ளது. எனவே, இக்கல்லூரியை என்.ஐ.டி.,யாக தரம் உயர்த்துவதற்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்ய முடியும். இங்குள்ள கல்லூரியில் தரமான ஆசிரியர்களும் உள்ளன என்பதையும் அவர் புதுச்சேரி முதல்வரிடம் அளித்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இக்கல்லூரி என்.ஐ.டி.,யாக தரம் உயர்த்தப்பட்டாலும்கூட, புதுவை மாணவர்களுக்கு எந்தவித இழப்பும் ஏற்படாது. இங்கு 450 இடங்கள் உள்ளன. அதில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டின் மூலம் நிரப்பப்படுகின்றன. இக்கல்லூரி தரம் உயர்த்தப்படும்போது மாணவர்களுக்கான இடங்களின் எண்ணிக்கை 900 ஆக உயரும். எனவே புதுச்சேரி மாணவர்களுக்கு மட்டும் 450 இடங்கள் கிடைக்கும் என்பதையும் பிருத்விராஜ் சுட்டிக்காட்டியுள்ளார்.

இக்கல்லூரி என்.ஐ.டி.,யாக தரம் உயர்த்தப்பட்டால் புதுச்சேரி இன்ஜினியரிங் கல்லூரிக்காக புதுவை அரசு செலவிடும் தொகையை காரைக்காலில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் இன்ஸ்டிட்யூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி கல்வி நிறுவனத்திற்கு வழங்கலாம். இதன் மூலம் அக்கல்லூரியும் நான்கு ஆண்டுகளில் நல்ல வளர்ச்சியை எட்ட முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பாட்னா, ராய்ப்பூர், அகர்தலா ஆகிய இடங்களில் செயல்பட்டு வந்த அரசு பொறியியல் கல்லூரிகள் ஏற்கெனவே என்.ஐ.டி.களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.