Increasing Lebanese casualties - Trump accuses of bombing

Started by Prem Kumar, Aug 05, 2020, 07:15 PM

Previous topic - Next topic

Prem Kumar

அதிகரிக்கும் லெபனான் உயிரிழப்பு - வெடிகுண்டு தாக்குதல் என டிரம்ப் குற்றச்சாட்டு

அதிபர் டிரம்ப் ராணுவ உயர் அதிகாரிகளுடன் பெய்ரூட் சம்பவம் குறித்து விவாதித்ததாகவும், இது வெடிகுண்டு தாக்குதல் மாதிரியான ஒன்றாக இருக்கக் கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.

பெய்ரூட் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடைபெற்ற பயங்கர வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.

பெய்ரூட்டில் துறைமுகம் பகுதியில் உள்ள வெடிமருந்து கிடங்கில் இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு திடீரென பலத்த சப்தத்துடன் வெடி விபத்து நிகழ்ந்தது.

அடுத்தடுத்து இரு வெடிவிபத்துகளால் தீப்பிழம்புகள் பீறிட்டெழுந்தன, அந்த பகுதியே கரும்புகையால் சூழ்ந்தது.

வெடிவிபத்து நிகழ்ந்த பகுதியை சுற்றி பல கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்கள் பலத்த சேதமடைந்தன.

காணும் இடமெல்லாம் போரில் உருக்குலைந்ததை போன்று காட்சியளித்தன.

200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தீவு பகுதிகளிலும் வெடிவிபத்தின் தாக்கம் உணரப்பட்டது.

மேற்கூரைகள், ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து தாக்கியதில் பலர் காயமடைந்தனர். ரத்த காயங்களுடன் மக்கள் சாலைகளில் ஓடியதும், சிலர் நடக்க முடியாமல் தரையில் படுத்து அலறிய காட்சிகளும் காண்போரை பதை பதைக்க வைத்தது.

ரசாயன கிடங்கில் நீண்ட நேரம் தீ பற்றி எரிந்த நிலையில், ஹெலிகாப்டர்கள் உதவியுடன் மூன்று மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டது.

உடனடியாக ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு மீட்பு பணி முடுக்கிவிடப்பட்டது.

ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதால் மருத்துவர்கள் சிகிச்சையளிக்க முடியாமல் திணறினர்.

பெய்ரூட் நகரில் இரு நாட்களுக்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு, சேத விபரங்களை கணக்கிடும் பணி நடைபெற்று வருகிறது.

விபத்து தொடர்பாக லெபனான் அரசு உயர்மட்ட விசாரனைக்கு உத்தரவிட்டுள்ளது.

துறைமுகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் 6 ஆண்டுகளாக இருப்பு வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரத்து 750 டன் அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளால் தான் வெடிவிபத்து நிகழ்ந்ததாகவும், இந்த கொடூர விபத்துக்கு காரணமானவர்களுக்கு உச்சபட்ச தண்டனை பெற்றுத்தரப்படும் என்றும் பிரதமர் ஹசன் டியப் தெரிவித்தார்.

வெடிபத்தில் உருக்குலைந்துள்ள லெபனான் அரசுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்க இஸ்ரேல் முன்வந்துள்ளது.

சர்வதேச பாதுகாப்பு மற்றும் ராஜீய ரீதியில் லெபனான் அரசுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ உதவிகள் வழங்கப்படும் என்று இஸ்ரேல் பாதுகாபுத்துறை அமைச்சர் பென்னி கண்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பெய்ரூட் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராணுவ உயர் அதிகாரிகளுடன் பெய்ரூட் சம்பவம் குறித்து விவாதித்ததாகவும், இது வெடிகுண்டு தாக்குதல் மாதிரியான ஒன்றாக இருக்கக் கூடும் என்றும் தெரிவித்தார்.